மன்னார் நீதிமன்ற தாக்குதலின் எதிரொலி!மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகளும் பணி பகிஸ்கரிப்பு
மட்டக்களப்பு மேல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி, வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றங்கள் என்பனவற்றில் இந்த பணிப் பகிஸ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் வினோபா இந்திரன் தெரிவித்தார்.
இதுதொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
மன்னார் நீதிமன்ற வளாகத்துக்குள் அத்துமீறிய சிலர் நீதிமன்றத்தை சேதப்படுத்தியதுடன் நீதிமன்றத்தையும் மிரட்டியுள்ளதுடன் அங்கு கடமையில் இருந்தோர் தமது கடமைகளை செய்யவிடாது இடைஞ்சல்களையும் ஏற்படுத்தியுள்ளனர்.
இதுதொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றத்தை சேதப்படுத்தியவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்பதுடன் இதற்கு மூல காரணமாக இருந்தவர்களும் சட்டத்தின் முன்னால் கொண்டுவரப்பட வேண்டும்.
இவ்வாறான அராஜக நிலைகள் எதிர்காலத்தில் நீதிவான்களுக்கும், சட்டத்தரணிகளுக்கும் ஏற்படாதவாறு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
மன்னாரில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மன்னார் சட்டத்தரணிகள் சடங்கம் எமது கவனத்துக்கு கொண்டுவந்ததையடுத்து இந்த பகிஸ்கரிப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை இன்று நீதிமன்றுக்கு வரவிருந்த வழக்குகள் அனைத்தும் பணிப் பகிஸ்கரிப்பு காரணமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.


